×

ஏரல் அருகே மங்கலகுறிச்சி-பெருங்குளம் சாலையில் குழாய் உடைப்பால் வீணாகும் குடிநீர்: சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

ஏரல்: ஏரல் அருகே மங்கலகுறிச்சியில் இருந்து பெருங்குளம் செல்லும் சாலையில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு கடந்த ஒரு மாதமாக குடிநீர் வீணாகி வருகிறது. இதனை சீரமைத்திட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.ஏரல் அருகே மங்கலகுறிச்சி தாமிரபரணி ஆற்றில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் பெரிய அளவில் உறைகிணறு அமைக்கப்பட்டு குடிநீர் எடுக்கப்பட்டு மங்கலகுறிச்சி, பெருங்குளம், பண்டாரவிளை, சுப்பிரமணியபுரம் சாலை வழியாக பதிக்கப்பட்ட குழாய்கள் மூலம் தூத்துக்குடியில் ஒரு பகுதி மக்களுக்கு விநியோகிக்க கொண்டு செல்லப்பட்டு வருகிறது. இதேபோல் சாயர்புரம் கூட்டு குடிநீர் திட்டத்திலும் மங்கலகுறிச்சி ஆற்றில் இருந்து குழாய்கள் வழியாக தண்ணீர் கொண்டு செல்லப்பட்டு வருகிறது.

மேலும் பெருங்குளம் பேரூராட்சி பகுதிக்கும், நட்டாத்தி பஞ்சாயத்து உட்பட பல பகுதிகளுக்கும் இவ்வழியாக குடிநீர் எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மங்கலகுறிச்சியில் இருந்து பெருங்குளம் செல்லும் சாலையில் இரண்டு இடத்தில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு கடந்த ஒரு மாதமாக குடிநீர் வீணாகி அருகில் உள்ள வயல்களுக்கு செல்கிறது. இதனால் தினசரி பல லட்சம் லிட்டர் குடிநீர் வீணாகி வருகிறது. மேலும் இந்த இடத்தில் சாலையில் அரிப்பு ஏற்பட்டு ரோடு சேதமடைந்து வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குடிநீர் உடைப்பை பார்வையிட்டு உடனடியாக சீரமைத்திட நடவடிக்கை எடுத்திட வேண்டும் என பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Mangalakurichi-Perunkulam road ,Eral , Near Earl On the Mangalakurichi-Perunkulam road Drinking water wasted due to pipe breakage: Public demand to rehabilitate
× RELATED மழை வெள்ளத்தில் சேதமடைந்து...